அவர் ஒரு சரித்திரம் - 005.

அவர் ஒரு சரித்திரம் - 005.

சிவாஜி பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம் மனங்களையெல்லாம் உருக வைக்கும் இரு காட்சிகள் . வியட்நாம் வீடு படத்திலிருந்து.

காட்சி 1.

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ "
மகாகவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய பாடல். வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதைஉணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல். படம் - வியட்நாம் வீடு; பாடியவர் - திரு டி எம் சௌந்தரராஜன். பாடலுக்கு இசை - கே வி மகாதேவன். பாடலை இயற்றியவர் - கவியரசர் 

காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார்.




உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

(பலர் நின்னதன்றோ என்று உயிர் நின்றது போல் பாடுகின்றனர். என்கண்ணின் பாவை போன்றவளே,எனதுயிர் உனதன்றோ (நினதன்றோ) என்றே மகாகவி எழுதியுள்ளார். பாடலின் மாத்திரைக்கேற்ப (METER) அந்த எழுத்து சற்று அழுத்தி உச்சரிக்கப்படுகிறது)
உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி 
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி 
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

பொன்னான அவளது கரம் பற்றியதால் தனது வாழ்வு ஒளிமயமானதி மட்டுமன்றி, சமூகத்தில் தனது பெயரும் பகழும் பெரிதும் வளர்ந்தது என்று அவளை மனதார பாராட்டுகிறார்.

காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி 
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி 
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன 
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் 
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் 
பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதமை செய்ததடி 
பேருக்குப் பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு 
என் தேவையை யாரறிவார், என்.... தேவையை யாரறிவார்
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் 

தன் பிள்ளைகளின் செயல் படுக்கையில் முள் வைத்தது போல் இமையை மூடவிடாமல் தன்னை வேதனை செய்கிறது என்று வருந்துகிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார். (இங்கு என் தேவையை யாரறிவார் என்று இரண்டாம் முறை கேள்வி கேட்பது போன்று பாடும்போது, தானும் அவரது தேவைகளை சரிவர அறிந்திருக்கவில்லையோ என்று பத்மினியின் முகத்தில் ஒரு கணம் தோன்றும் திகைப்பும், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று அவர் பாடி முடிக்கும்போது, அவர் சிந்தும் நிம்மதி கலந்த கண்ணீரும் நமது உள்ளத்தில் இவர்கள் அல்லவோ ஆதர்சத் தம்பதிகள் என்ற மகிழ்வையும் (சிறிது பொறாமையையும்) உண்டாக்குகின்றன.

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

சிவாஜி, பத்மினி இருவரும் இப்பாடலில் நடிக்கவில்லை, வாழ்ந்தே காட்டியிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் காட்டும் வாத்சல்யம், அதிலும் சிவாஜி பத்மினி மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் அன்பும், நமது உள்ளங்களை கலங்க வைக்கின்றன. வயதான காலத்தில் தமக்குத் தாமே துணை என்பது சிறிது வேதனை தரும் விஷயம்தான். இவர்கள் இருவரது நடிப்பைப் பற்றிக் கூற எத்தனை காண்டங்கள் எழுதினாலும் போதாது.

இவர்கள் இருவரைத் தவிர இன்னும் இருவரைப் பற்றி கூறியே தீர வேண்டும். முதலில் திரை இசைத் திலகம் திரு கே வி மகாதேவன். காட்சியின் அழுத்தத்தை நன்கு உணர்ந்து, இசை ஒரு துளியும் பாடல் வரிகளை மீறி ஒலித்து விடாமல் மனதை இளகச் செய்யும் ஒரு அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார். கவியரசரோ, மகாகவியின் பாடலிலிருந்து இரண்டு வரிகள் மட்டும் எடுத்துக் கொண்டு, அவரே "பலே பாண்டியா" என்று பாராட்டும் வண்ணம் மனதை நெகிழச் செய்யும் பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார். இப்படிப் பட்ட ஒரு பாடலை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!

காட்சி - 2 இறுதிக் காட்சி 
"நீ முந்தின்டா நோக்கு, நான் முந்தின்டா நேக்கு"
ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணிபுரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்வதற்கெல்லாம் 'பூம் பூம் மாடாக' தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை பயன்படுத்திக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). 

வேலைமுடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், பத்மினி மெதுவான குரலில் "டேய் ஸ்ரீதர், உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி 'அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்'ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா" என்ற் கெஞ்சுவதுபோல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிப்பிக்கல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்....

அப்பா ரிட்டையர்ட் ஆன முதல்மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து "அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப்பணம்" என்று நீட்டுவது பெரும் அதிர்ச்சி .வேலைக்கார முருகன் கூட அவரை அவமதிப்பது பெரும் கொடுமை.

சிவாஜிக்கு இதய நோய் வந்து ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் தனது குடும்பத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டு ஒவ்வொருவரிடமும் பேசும் வசனங்கள் மிகவும் உணர்ச்சிபூர்மனவை. அனைவரும் மனம் திருந்தி மனம் வருந்தி தந்தையிடம் மன்னிப்பு கேட்கின்றனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் சிவாஜியை அனைவரும் ,மகிழ்ச்சியுடன் வணங்கி வரவேற்கின்றனர். குடும்பம் ஒன்றானதை கண்டு சிவாஜி மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறார். மருத்துவர் பத்மினியிடம் அவருடைய இதயம் பலவீனமாய் இருப்பதால் அவருக்கு அதிர்ச்சி தரும் விஷயம் எதுவும், ஆனந்தமானதாய இருந்தாலும் அதிர்சியானதாய் இருந்தாலும் கூறக் கூடாது என்று சொல்கிறார். அப்போது அவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி அங்கு வந்து அவரது வேலை நீட்டிப்புக்கான உத்தரவு கடிதத்தை தருகிறார். மகிழ்ச்சி, கர்வம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்று சேர அவர் தன தாயின் படத்தின் முன் நின்று"அம்மா, எனக்கு வேலை கிடைத்து விட்டது. எனது சேவையை மதித்து எனக்கு மேனேஜர் பதவி தந்திருக்காங்கம்மா, மாசம் 10000 சம்பளம், மாசம் 10000 என்று கூறிக்கொண்டே இதய துடிப்பு நின்று போய் உயிரை விடுகிறார். அந்தக் காட்சியை freeze செய்வதுடன் படம் முடிவடைகிறது இறுதிக் காட்சியின் போது கண் கலங்காதவர்களே இருக்க முடியாது. என்னால் அவர் கூறும் வசனங்களை அப்படியே எழுத முடியவில்லை. அதனால் பொதுவாக எழுதியுள்ளேன். எழுதுவதற்கே முடியவில்லை என்றால், பார்பபது எவ்வளவு நெஞ்சை உருக்கும்.. இருப்பினும் அந்த இறுதிக் காட்சியை இத்துடன் இணைத்துள்ளேன். 

அந்த மாபெரும் நடிகனுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஜெய்ஹிந்த்!.

https://www.youtube.com/watch?v=mBl6Cw5i1oc

Comments

Popular posts from this blog

அவர் ஒரு சரித்திரம் - 004

அவர் ஒரு சரித்திரம் - 2